Saturday, April 8, 2017

*H1N1வைரஸ் தொற்று*
~~~~~~~~~~~~~~~~~~~~
  Dr. Anfas farook


தற்பொழுது இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்குக் காய்ச்சல், H1N1 காய்ச்சல், டெங்குவை ஒத்த பிறிதொரு சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பன மிக வேகமாக பரவி வருவதோடு பல உயிர்களையும் பறித்துள்ளது. அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சல் (Swine flue) என்பது H1N1 எனப்படும் influenza virus இனால் எமது சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு நோயாகும்.

இந்த H1N1 வைரஸ் காலத்துக்கு காலம் தனது மேற்பரப்பிலுள்ள புரதத்தின் தன்மையை மாற்றி, எமது உடலின் நிர்பீடனத்தொகுதியிலிருந்து தப்பித்து நோய்த்தொற்றில் ஈடுபட்டு வருகின்றது. இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் இந்நோயானது வேகமாகப் பரவி வருகின்றமை நாம் அறிந்ததே.

 இவ்வாறான இன்புளுவென்சா காய்ச்சல் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றது. குளிர்வலய நாடுகளில் குளிர் காலத்தில் இக் காய்ச்சல் பொதுவாகப் பரவுகின்றது. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் வருடம் முழுவதும் நோயத்தொற்றல் ஏற்படலாம். இலங்கையில் November,December, January, மாதங்களிலும் May, June, July மாதங்களிலுமே அதிகளவு தொற்று ஏற்படுகின்றது.

இது மனிதர்களை மாத்திரமன்றி பறவைகள், விலங்குகள் என்பவற்றையும் தாக்குகின்றது.சில வேளைகளில் பறவைகள், விலங்குகளில் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களும் மனிதரில் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களும் இணைந்து அதிக வீரியமுள்ள நோய் எதிர்ப்புச் சக்திக்குக் கட்டுப்படாத புதிய வகை வைரஸை உருவாக்கி அதிவீயமுள்ள நோயை மனிதரில் உருவாக்கும். எனவே இக்காலகட்டத்தில் வீட்டில் உள்ள பிராணிகள் விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

*நோய் அறிகுறிகள்*

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் சிந்துதல், தலையிடி, தசை வலி, மூட்டு வலி, களைப்பு, போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு பசியின்மை, வாந்தி போன்றவையும் ஏற்படலாம்,சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படலாம்.

*நோய் பரவும் முறை*

டெங்கு நோயைப் போலன்றி இது மிக வேகமாக பரவக்கூடியதாகும். நோயாளி ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் சிறுதுளிகள் காற்றில் பரவி அருகில் உள்ளவர்களின் சுவாசப்பாதை வழியாக சென்று நோயை ஏற்படுத்துகின்றது. நோயாளியையோ அவர் பயன்படுத்திய பொருள்களையோ தொட்டு விட்டு கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தொடும் போது பரவலாம். நோயாளி தொட்ட ஆளிகள்( switch) கதவு Lock, சாவி மற்றும் காசு போன்றவை மூலமும் பரவலாம்.

H1N1 தொற்று ஆரோக்கியமான இளைஞர், யுவதிகளில் சாதாரண காய்ச்சலையே ஏற்படுத்தும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய நுரையீரல் சம்பந்தமான நோயாளிகள், சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட இடமுண்டு. 

*நோயை தடுக்கும் வழிகள்*

நோய் வாய்ப்பட்டவர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குத் தொற்றாமல் பாதுகாக்கலாம். தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையையோ ரிசுப் பேப்பரையோ உபயோகித்து முகத்தை மூட வேண்டும். அதே போல பயன்படுத்திய கைக்குட்டைகளைச் சவர்க்காரமிட்ட நீரில் துவைக்க வேண்டும். அத்துடன் நோய் வாய்ப்பட்டவர்கள் சனக்கூட்டங்களுக்குச் செல்வதையும் பொது போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்ட்டவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் முகக் கவசம் ( Face Mask) அணிவதன் மூலமும் ஓரளவு நோய்தொற்றலைத் தடுக்க முடியும். கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவதன் மூலமும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.ஒரு வாரம் செல்லும் வரை ஓய்வெடுக்கலாம்.
 *புகைப்பிடிப்பவர்களை இந்த நோய் அதிகம் தாக்கும் என்பதால் புகைத்தலை தவிர்ப்பது நல்லது.*


நோய்த்தொற்றில்லாதவர்கள் சில நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை தவிர்ந்து கொள்ளலாம். சனங்கள் கூடும் இடங்களுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம், தடிமல் நோய் அறிகுறி உள்ளவர்களிடம் தள்ளியிருங்கள், எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருங்கள்.தேவையற்ற விதத்தில் அடிக்கடி மூக்கு, வாய் போன்றவற்றை தொடாதீர்கள். இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது டிசு கடதாசி அல்லது கைக்குட்டை இல்லாதவிடத்து மூக்கையும் வாயையும் மூடிக்கொள்வதற்கு உள்ளங்கைக்கு பதிலாக முழங்கையின் உட்புறத்தை பயன்படுத்துங்கள். பாவித்த டிசு கடதாசியை பாதுகாப்பாக வீசியெறியுங்கள்.

*நோய்வாப்பட்டால்??*

நோய்வாய்ப்பட்டவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். சூப், கஞ்சி, இளநீர் போன்ற நீராகாரங்களை அதிகளவு பருக வேண்டும். வலி, காய்ச்சல் இருப்பின் Paracetamol மாத்திரைகளை வைத்தியரின் ஆலோசனையின் படி பயன்படுத்த வேண்டும். முன்பு ஆரோக்கியமாகவிருந்த இளைஞர், யுவதிகள் வீட்டிலிருந்தே அருகிலிருக்கும் வைத்தியரை ஆணுகிச்சிகிச்சை பெறலாம். அனைவரும் அரச வைத்தியசாலைக்கு வரவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால சிறுசீரக, ஈரல், இருதய , நுரையீரல் நேய்கள் உள்ளவர்கள் வைத்திய நிபுணர் ஒருவரின் ஆலோசனை பெறல் அவசியமாகும். அவர்களில் அபாயகரமான அறிகுறிகள் இருப்பவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

மேலும் மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும் Pneumonia இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளவர்களும் தொடர்ச்சியான வாந்தியால் போதிய நீராகாரங்களை எடுக்க முடியாதவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

டெங்கு காய்ச்சலும் இதே போன்ற ஆரம்ப அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் ஆரம்பத்திலேயே குருதிப் பரிசோதணை செய்வது சிறந்தது. 

*கர்ப்பினிகள் மற்றும் புதிதாக குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்படின்  ஏற்பட்ட முதல் நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்*

- Dr. Anfas farook

No comments:

Post a Comment