*காணாமல் போன சகோதரன்*
கலாநிதி அக்ரம் கஸ்ஸாப்
தமிழில் அஷ்ஷேக் அக்ரம் அப்துஸ் ஸமத்
ஈமானுக்கு அடுத்ததாக மிகுந்த மகிழ்ச்சிக்குரியது உண்மையான ஒரு சகோதரன் கிடைப்பது.
அவன், எப்பொழுதும் உன்னைப் பற்றியே விசாரிப்பான், தேடுவான், நீ சொல்லும் முன்னரே உனது வலியை உணர்ந்து கொள்வான், எவருக்கும் தெரிந்து விட முன்னரே உனது தேவைகளை நிறைவேற்றி வைப்பான்.
அவன் உனக்கான போர்வை, உனது நோய்க்கான மருந்து, உனது பசிக்கான உணவு.
அவ்வாறான ஒருவனைக் கண்டு கொண்டால்... அவனது தவறுகளை மன்னிக்கத் தயாராக இரு, சறுக்கல்களை சகித்துக் கொள், அவனைக் கைவிடாது இறுக்கப்பிடித்துக் கொள்.
ஏனெனில் அவன் ஒரு அரிதான சொத்து, அவனை இழந்து விட்டால் வாழ்க்கையில் நிறைய நல்ல விடயங்களை இழந்து விடுவாய்.
இந்த சகோதரத்துவம்தான் மூஸாவை, ஹாரூனுக்கும் நுபுவ்வத் வேண்டும் என்று கேட்க வைத்தது. ஹாரூனின் சிறப்பம்சங்களை மறக்கவிடாமல் செய்தது, குறிப்பாக ஹாரூனின் பேச்சுத் தெளிவைப் பற்றி உரத்துச் சொல்கிறார் ” எனது சகோதரன் ஹாரூன் என்னை விடவும் தெளிவாய்ப் பேசக் கூடியவன், எனக்கு உதவியாய் அவனையும் அனுப்பிவை, அப்போது மக்கள் எனது செய்தியை சரியாகப் புரிந்து கொள்வர், அவர்கள் என்னைப் பொய்ப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது, (அல்லாஹ்) சொல்கிறான், உங்கள் சகோதரனால் உங்களைப் பலப்படுத்துகிகிறோம், உங்களுக்கு அத்தாட்சி ஒன்றையும் தருகிறோம். (கஸஸ் 34,35).
இப்னு கஸீர் சொல்கிறார், இதனால்தான் சில ஸலப்கள் சொல்கின்றனர், மூஸா தனது சகோதரனுக்கு செய்த நன்மையைப் போன்று எந்த மனிதரும் தனது சகோதரனுக்குச் செய்திருக்க முடியாது. ஏனெனில் அவர் நபியாக அனுப்பப்படுவதற்கு பரிந்துரைத்தவர் மூஸாதான். இதனால்தான அலகுர்ஆன், மூஸா அல்லாஹ்விடத்தில் கருத்தாக்கம் மிக்கவர் என்கிறது (அஹ்ஸாப் 69). தப்ஸீர் இப்னு கஸீர் – 6-212.
மற்றொரு சகோதரத்துவம் இருக்கிறது, அது போலியானது. செழிப்பான நேரங்களில் மட்டுமே அது வெளிப்படும். வசதி வரும் போது மட்டுமே அன்பு காட்டும், தேவையற்ற நேரத்தில் கொடுக்க முற்படும். அது பலகையால் ஆன கேடயம் போன்றது. கடதாசியால் ஆன அம்பு போன்றது. அந்தக் கோட்டை அபாயத்தை ஒழிக்காது, தீமையைத் தடுக்காது. அந்த சகோதரத்துவத்திற்கு நான்கு தக்பீர்கள் சொல்லிவிடு. அதனை இழந்துவிடுவதால் கவலைப்படாதே, ஏனெனில் அது உயிர் இழந்த ஒன்று.
போதுமான உணவு இருக்கும் போது, தேவைக்கதிகமான பானம் இருக்கும் போது, தனது சகோதரனுக்கு ஊட்டிவிட போட்டி போடும் சகோதரத்துவம் சகோதரத்துவமல்ல. அது போலி, பொய்யான உபசரிப்பு, ஏமாற்று, இவர்களால் எந்தப் பசியும் அடங்காது, எந்த நிர்வாணமும் மறையாது. இவர்கள் இருப்பதும் இல்லாமையும் சமமே.
உண்மையான சகோதரனால்தான் உலகம் இனிக்கும், அவன் பக்கபலமாய் இருப்பான், தேவையை நிறைவேற்றுவான், அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுவான், இல்லாதவனுக்குக் கொடுப்பான், கஷ்டங்களில் தன்னிடம் உள்ளதைக் கொடுத்து உதவுவான், ஏன்? இல்லாததையும் கொடுத்து உதவுவான், உனக்காக அவன் கடன்படுவான், உனக்காக அவன் பசித்திருப்பான், உனது சுகயீனம் அவனது சுகயீனம், உனது கவலை அவனது கவலை, உனது திருப்தியே அவனது எதிர்பார்ப்பு, ஏனெனில் அதில்தானே அல்லாஹ்வின் திருப்தியிருக்கிறது.
இவனுக்கும், உன்னை வார்த்தைகளால் மட்டும் நேசிப்பவனுக்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது. வார்த்தையால் இனிப்பைத் தருவான் ஆனால் செயல்களில் அழகு இருக்காது.
எமக்குத் தேவையான சகோதரத்துவம் எது தெரியுமா?
அது மானத்தைக் காக்க வேண்டும் அவமானப்படுத்தக் கூடாது.
பலப்படுத்த வேண்டும் பலவீனப்படுத்தக் கூடாது, மென்மை வேண்டும் கடினம் கூடாது, நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும் தூரமாக்கி விடக் கூடாது, இணைக்க வேண்டும் பிரித்துவிடக் கூடாது, இலகு படுத்த வேண்டும் கஷ்டப் படுத்தக் கூடாது, நற்செய்தி சொல்ல வேண்டும் வெறுப்பேற்றக் கூடாது.
எடுத்தால், நன்றி செலுத்தும் சகோதரத்துவம் வேண்டும், கொடுத்தால் மறைவாய்க் கொடுக்கும் சகோதரத்துவம் வேண்டும்.
சந்தோச தருணங்களில் அங்கு தெளிவான உதவிகள் இருக்கும், கஷ்ட வேளைகளில் அங்கு உறுதியான நிலைப்பாடுகள் இருக்கும்.
இதுதான் சகோதரத்துவம்…
*இதுபோன்ற ஒருவனைக் கண்டால் அவனை இறுகப் பிடித்துக் கொள்*
ஏனெனில்
*அவன் உனது பலம்* ,
*அவனை தவறவிட்டுவிடாதே!*
ஏனெனில்
*அவன் அரிதான ஒரு சொத்து* ,
*கவனக் குறைவாய் இருந்து விடாதே!*
ஏனெனில்
*அவனை இழந்து விட்டால் வாழ்க்கையில் நிறைய நல்ல விடயங்களை இழந்து விடுவாய்*
எங்களுக்கும் உங்களுக்கும் உண்மையான சகோதரனை உண்மையான உதவியாளனை அல்லாஹ் தருவானாக.
ஆமீன்
***பிடித்ததில் பிடித்தது ***
No comments:
Post a Comment